Friday, October 07, 2016

ஜே.ஜே.சிலகுறிப்புகள் தழுவலா? ஒரு கடிதம்

ராஜரத்தினம்
நண்பர் ஜெயமோகனுக்கு,
சமீபத்தில் ஒரு வலை தளத்தில் சற்று காட்டமான உள்ளீட்டை படித்தேன். இது ஜே ஜே somerset இன் moon and.. நாவலின் ஜெராக்ஸ் என்று சாடுகிறது.(ஆனால் அதற்கான காரணங்களை குறிப்பிடவில்லை) நானும் moon and six .. நாவலை உடனே வலையில் மேய்ந்து மேலோட்டமாக வாசித்தேன். ஓரளவு இரண்டு நாவலுக்கும் சார்பு உள்ளதாக உணர்ந்தேன் (moon and six சற்று நேர்க்கோடான கதை சொல்லல் முறையை பின்பற்றுவதாக உணர்கிறேன்.. ஆனாலும் தத்துவ ரீதியான குழப்பங்கள் கொஞ்சம் semi-autobiography முறை என இரு நாவல்களுக்கும் பொதுத்தன்மை இருக்க செய்கிறது) moon and six … முழுமையாக படிக்காததால் இது குறித்து மேலும் சொல்ல இயலவில்லை. ஆனால் ஜேஜேயில் தனித்தன்மை இருப்பதை மறுக்க இயலாது. என் கரிசனம் ஏன் இந்த சார்பு யாராலும் குறிப்பிட படவில்லை என்பதே.. jean christophe பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருந்ததை பார்த்தேன். இது போல் சார்பு பற்றி விவாதிக்க வேண்டியது ஒரு படைப்பாளியின் பொறுப்பு. அல்லது படைப்பை விமர்சிப்பவனின் பொறுப்பு.. சார்பு பற்றி அறியதாவரை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் சு.ரா அல்லது ஜேஜே விமர்சித்தவர்கள் அப்படி அறியாமை உள்ளவர்களாக தோன்றவில்லை. குறிப்பிடும் அளவு சார்பு இரு படைப்புகளுக்கும் இல்லாமல் இருப்பதாக எடுத்து கொண்டிருக்கலாம். ஆனாலும் என்னளவில் இந்த ஐயம் எழுந்து உள்ளது.. இந்த ஐயம் எந்தளவு நியாயமானது என்பதை அறிய விழைகிறேன்
அன்புள்ள நண்பர் ராஜரத்தினம் அவர்களுக்கு
சுந்தர ராமசாமியின் நாவலைப்பற்றிய உங்கள் கடிதத்தை கண்டு இதை எழுதுகிறேன். நீங்கள் சொல்லிய அந்த இழையை நான் படிக்கவில்லை. ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி இந்த குற்றச்சாட்டு அது வெளிவந்த நாள் முதலே இருந்துள்ளது. 1982ல் நாவல் வெளிவந்ததுமே அம்பை அது ஒரு பிரெஞ்சுநாவலின் உல்ட்டா என்று குற்றம் சாட்டி பேசினாராம். உடனே பலர் தாங்கள் படித்த பிரெஞ்சு நாவல்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். இக்குற்றச்சாட்டுகளால் வெதும்பிப்போன சுந்தர ராமசாமி இரண்டாம் பதிப்புக்கு பிரெஞ்சுக்காரரான ப்ராங்க்வா குரோ ஐ ஒரு பின்னுரை எழுதவைத்தார். அதில் அவர் இந்நாவல் எந்த பிரெஞ்சு நாவலுடைய தழுவலும் அல்ல, இது முழுக்க முழுக்க அசலானது என்று சொன்னார்
எனக்குத்தெரிந்து கடைசியாக ‘பெக் எ புக்’ வரை ஒரு இருபது நூல்கள் அவ்வாறு அதன் அசல்களாகச் சொல்லப்பட்டுள்ளன. இப்போது கடைசியாக இந்நூல். இனியும் நூல்கள் இவ்வாறு சுட்டப்படும். தமிழில் ஜே.ஜே.சிலகுறிப்புகள் மட்டும் ஏன் இந்த அளவுக்கு இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது என்று பார்த்தால் சில விஷயங்கள் கண்ணில் படும்.
ஜே.ஜே.சிலகுறிப்புகளின் அடிப்படை வடிவம் ‘ஒரு பெரிய எழுத்தாளனை இளம் எழுத்தாளன் அணுகிப் பார்த்தல்’ என்பது மேலை இலக்கியத்தில் மிக அதிகமாக எழுதபப்ட்டது. தமிழில் அதிகமாக எழுதப்படாததும் கூட. ஜே.ஜே.சிலகுறிப்புகளின் இதே வடிவம் கொண்ட நூறு நாவல்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும். சாமர்செட் மாம் எழுதிய நூல்களிலெயே மூன்று நாவல்களுக்கு இவ்வடிவம் உண்டு. ஜே.ஜே.சிலகுறிப்புகளுடன் இன்னும் அதிகமாகப் பொருந்துவது மாம்-ன் ‘கேக்ஸ் ஆண்ட் ஏல்’ என்ற நாவல். அதில் உள்ள அஷெண்டன் என்ற கதாபாத்திரம் பாலுவை பெரிதும் ஒத்திருக்கும்
ஒருவர் தன் நினைவுகள் வழியாக ஒருவரை பதிவுசெய்து போவதும், டைரிக்குறிப்பு வடிவமும் இதேபோல மேலை இலக்கியத்தில் மிகவும் பழகிப்போனவை. இந்திய இலக்கியத்தில்கூட இவ்வடிவத்தில் பல நல்ல நாவல்கள் உண்டு. சிவராம காரந்தின் ‘அழிந்தபிறகு’ ஒரு நல்ல உதாரணம். ஏன், சுந்தர ராமசாமி பற்றி நான் எழுதிய நினைவுக்குறிப்பான ‘சுரா-நினைவின் நதியில்’ கூட இதே பாணியில்தான் உள்ளது
கணிசமான வாசகர்கள் நாவல்களை ‘கதை’களாக வாசிக்க கூடியவர்கள். அதற்குமேல் நுண்ணிய அவதானிப்புகள் அவர்களுக்குச் சாத்தியமல்ல. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட நாவல்களில் எதை வாசித்தாலும் அதன் கதை ஜே.ஜே.சிலகுறிப்புகள் போல இருக்கிறதே என்ற எண்ணம் வருவது இயல்பே. அதை சிலரிடம் விவாதித்து தெளிவு படுத்திக் கொள்ள முடிந்தால் நல்லது.
ஆனால் அப்படி தோன்றிய கணமே தாங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறோம் என்ற பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதைச் சொல்வது வழியாக தங்கள் வாசிப்பை முன்நிறுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்ற ஆர்வம். மேலும் நம் வாசகர்களில் பலருக்கு– ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு– தமிழில் என்ன எழுதியிருக்கப் போகிறார்கள், எல்லாம் ஆங்கிலத்திலிருந்துதான் எடுத்திருப்பார்கள் என்ற முன் தீர்மானம் ஏற்கனவே இருக்கிறது. நூற்றாண்டுகால அடிமைத்தனம் ஆழ்மனதில் உறைவதன் விளைவு அது. ஆகவே எழுதிவிடுகிறார்கள்.
ஜே.ஜே.சிலகுறிப்புகளின் வடிவம் ஒரு ‘நிலைவடிவம்’ [டெம்ப்ளேட்] போன்றது. அதில் என்ன நிரப்பப் பட்டுள்ளதோ அதுவே சுந்தர ராமசாமியின் படைப்பு. நாவல் இலக்கியத்தில் இத்தகைய பல நிலைவடிவங்கள் உண்டு. இன்னொரு உதாரணம் தன்னொப்புதல் [கன்·பெஷனல்] நாவல். இவ்வகை இலக்கியங்களை மெல்ல ஒரு தனிப்பட்ட வகைமையாகவே அங்கீகரிப்பது இலக்கிய வழக்கம். உலகப் பேரிலக்கியங்களில் கணிசமானவை இப்படி ஒரு பொதுவடிவத்தை கொண்டிருப்பவை. பல சமயம் ஏற்கனவே எழுதபப்ட்ட கதையை மீண்டும் எழுதியவை.
ஜே.ஜே.சிலகுறிப்புகள் முற்றிலும் சுந்தர ராமசாமியின் கற்பனையே என என்னால் உறுதியாகவே சொல்ல முடியும். அதற்கு முன்னுதாரணமாக இருந்தது கேரள நாடக ஆசிரியரான சி.ஜெ.தாமஸ். அவர் கோட்டயம்காரர். சிறுவயதில் அவர் ஒரு வீட்டில் வந்து தங்க, அருகே வசித்த சுந்தர ராமசாமியின் அப்பா எஸ்.ஆர்.சுந்தரம் அய்யர்[ எஸ்.ஆர்.எஸ்] மற்றும் டாக்டர் பிஷாரடி [இவரை நானே பார்த்திருக்கிறேன். முதல் காலச்சுவடு இதழுக்கு எம்.என்.ராயின் பிளாக்குகள் வாங்க என்னை சுந்தர ராமசாமி கோட்டயத்துக்கு அனுப்பியபோது. தொண்டு கிழமாக] ஆகியோருடன் சுந்தர ராமசாமியும் போய் பார்த்தார். அப்போது சி.ஜெ.தாமஸ் வரைந்தது காந்தி ஓவியம். பெரிய மாற்றம் இல்லாமல் இக்காட்சி அபப்டியே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் வருகிறது
அன்றுமுதல் சி.ஜெ.தாமஸ் மேல் சுந்தர ராமசாமிக்கு தணியாத மோகம் இருந்தது. சி.ஜெ.தாமஸின் நெருக்கமான சகாவான எம்.கோவிந்தனை தன் மானசீக ஆசிரியராக வரித்துக் கொண்டவர் சுந்தர ராமசாமி .[அவரே நாவலில் எம்.கெ.அய்யப்பன்] செம்மீன் மொழிபெயர்த்து வந்த நாட்களில் கேரளத்தில் ·பாக்ட் கொச்சி நிறுவன மேலாளராக இருந்த எம்.கெ.கெ நாயர் [இவர் கோவிந்தனின் நெருக்கமான நண்பர். இலக்கியப் புரவலர். ‘யாரோடும் பகையின்றி…’ என்ற பிரபல மலையாள சுயசரிதையின் ஆசிரியர்] கொச்சியில் நடத்திய இலக்கிய மாநாட்டுக்கு போன சுந்தர ராமசாமி கடைசியாக சி.ஜெ.தாமஸைப் பார்த்தார். சிஜெ தமிழ் வணிகஇலக்கியத்தை லேசாக நக்கல்செய்து அப்பால் சென்றுவிட்டார். இங்கே தீவிர இலக்கியம் உண்டு என்ற தகவலை அவருக்குச் சொல்ல சுந்தர ராமசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சுந்தர ராமசாமி அப்போது நன்றாக பேசமாட்டார். இக்காட்சியே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் வருகிறது
சி.ஜெ.தாமஸ் இறந்தபோது அவரது நண்பர் பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாள நாவலாசிரியர். அவரது ‘இனி நான் உறங்கலாமா’ என்ற மலையாள நாவல் ஆ.மாதவன் மொழியாக்கத்தில் தமிழில் வந்துள்ளது. வரலாற்றாசிரியர். காலச்சுவடு இதழில் அவரது ‘சாதியமைப்பும் கேரள வரலாறும்’ என்றநூலின் சுருக்கம் என்னால் அளிக்கப்பட்டுள்ளது. என் ஆசிரியர் போல இருந்தவர்] அவரைப்பற்றி ஒரு நீண்ட நினைவுக்குறிப்பு எழுதினார். அது அவரது ‘மாயாத்த சந்தியகள்’ என்ற நூலில் உள்ளது. இக்குறிப்பு சுந்தர ராமசாமியை பெரிதும் கவர்ந்திருந்தது. இதிலுள்ள பல நிகழ்ச்சிகளின் மறுஆக்க வடிவம் ஜே.ஜே.சில குறிப்புகளில் உண்டு. இதுவே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலுக்கு விதை.
பெரும்பாலும் சி.ஜெ.தாமஸின் ஆளுமை, தனி வாழ்க்கை ஆகியவற்றை பின் தொடரும் நாவல் ஜே.ஜே.சிலகுறிப்புகள். சி.ஜெயின் மனைவி ரோஸி தாமஸ் அதே காலகட்டத்தில் எழுதிய ‘இவன் என்றெ ப்ரிய சிஜெ..’ என்ற வாழ்க்கை குறிப்புகளின் பாதிப்பும் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் உண்டு. இதில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு தெளிவான மலையாள முன்மாதிரிகள் உண்டு. சின்ன ஒருவரி கதாபாத்திரங்களுக்குக் கூட.
சுந்தர ராமசாமி இந்த உண்மையான வாழ்க்கைக் கூறுகளை அங்கதமாக மறு அமைப்புசெய்திருக்கிறார். அதுவே அவரது படைப்பூக்கம். அதன் வழியாக தமிழ்பண்பாட்டுச் சூழல் மீதான விமரிசனமாக இந்நாவலை உருவாக்குகிறார். உண்மையான வாழ்க்கையை திரிபுபடுத்தி எழுதுவது, அங்கதம், சிதறுண்ட வடிவம் ஆகியவை காரணமாக தமிழில் பின் நவீனத்துவ எழுதுமுறையின் முதல் உதாரணமாக விளங்குகிறது ஜே.ஜே.சிலகுறிப்புகள். அது நவீனத்துவத்தின் உச்சம். கடைசிப்படி. ஆகவே இயல்பாக பின் நவீனத்துவ எழுத்தின் முதல் படியும் கூட. நான் இவ்விஷயங்களை ஓரளவு ஏற்கனவே எழுதிவந்திருக்கிறேன் . உண்மையில் நாம் இன்னும் அந்நாவலை பற்றி பேசவே தொடங்கவில்லை
அன்புடன்
ஜெயமோகன்

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes